சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா-வின் கனவு நிறைவேறியதா?
அடிமைநாட்டுக்கும், ஜனநாயக நாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளில் மட்டுமே அறிய முடியும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் பலரை மறந்து விட்டோம். அவர்களை மறந்து விட்டால் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பலனில் அர்த்தம் இருக்காது. அப்படி ஒரு அறியப்படாத தலைவர் பற்றி தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் பல சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை தவிர அவர்களின் சாதனைகள் தெரிவது இல்லை.
இன்று நாம் பார்க்கும் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்கள். இவர் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலகுண்டு பகுதியில் ராஜம் ஐயர் மற்றும் நாகலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் பிறந்தார். பெற்றோர் இட்டப்பெயர் சுப்பராமன்.1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார்.1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார். பின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயிர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். 1899-ம் ஆண்டு மீனாட்சி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.
1906ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆர்ய சமாஜி தாஹுர்கான் சந்திர வர்மாவின் உரையைக் கேட்டு சிவாவின் தேசபக்தி கொழுந்து விட்டு எரிந்தது. இளைஞர்களின் மனதில் தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமான பேச்சுக்களின் மூலம் சுதந்திர உணர்வைத் தூண்டத் தொடங்கினார்.
தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். பிரிட்டிஷாரின் கீழ் செயல்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக அவரின் நடவடிக்கை இருந்தது. எனவே அவரை திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. அங்கிருந்து புறப்பட்டு ஊர்ஊராகச் சென்று சுதந்திர வேட்கையைத் தூண்டும் விதத்தில் சொற்பொழிவாற்றினார்.
வ.உ.சி மற்றும் பாரதியாரின் பேச்சு மற்றும் கட்டுரையால் தேசபக்தியில் ஊறிப்போய் இருந்தார். இவரின் திருநெல்வேலி பயணம் இவருக்கும் வ.உ.சி மற்றும் மகாகவி க்கும் இடையேயான தோழமை அதிகரித்தது. "சிவாவும் வ.உ.சி யும் இல்லை என்றால் நான் ஒரு குருடன்" என்று பாரதியார் சொல்லும் அளவுக்கு அவர்களின் நட்பும் புரிதலும் இருந்தது.
பின் சென்னை சென்ற சிவா அங்கு பிரபஞ்சமித்ரன், ஞானபானு என்ற பத்திரிக்கைகளை நடத்தி வந்தார். பாரதியார் ஆங்கிலேயரால் தேடப்பட்ட காலத்தில் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை, கதைகள் மற்றும் சிறுகதைகளை ஞானபானு மாத பத்திரிக்கையில் எழுதினார்.
சிவா ஒரு தீவிர தமிழ் பற்றாளர். அவர் தமிழர்கள் தூய தமிழை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்."வேறுவேறு பாஷைகள் — கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய்போபோபோ" என்ற நண்பர் பாரதியின் வார்த்தைகளை ஒட்டி " ஒரு நாட்டின் உயிர் என்பது அந்த நாட்டு பாஷைகளில் இருக்கின்றது. தன் சொந்த பாஷையைக் கற்காதவர்கள், தங்களது பைத்தியக்காரத்தனத்தாலோ அல்லது முட்டாள்தனத்தாலோ தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஒப்பானவர்கள். தற்கொலை குற்றமென்றால், சொந்த பாஷையைக் கற்காதது அதுபோல ஆயிரம் மடங்கு குற்றம் செய்வதற்குச் சமம். அரசாட்சி செய்பவர் இதனைக் குற்றமென்று கூறிடினும், சர்வலோகத்தையும் ஆளும் மகாசக்தியின் முன்னர் இவர்களெல்லாம் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்" என்று தமிழ் மொழியைக் கற்க விரும்பாமல் ஆங்கிலத்தின் பின் ஓடுபவர்களைச் சாடினார் சுப்பிரமணிய சிவா.
சமஸ்கிருதம் கலக்காத தமிழ் பேசப்படவும் எழுதப்படவும் வேண்டும் என்றெண்ணிய அவர் தனது ஞானபானு இதழில்,'உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா? முடியுமானால் எழுதுங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது ஞானபானுவில் எட்டுப் பக்கத்துக்குக் குறையாது வரும்படியாக தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் ஒருவர் முன்வந்திருக்கிறார்.' என்று ஒரு விளம்பரம் வெளியிட்டார்.
சுதேச மித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளை ஆங்கிலம் கலந்த தமிழ் எழுதியதற்காக ஆசிரியரைச் சாடி எழுதினார். திருக்குறளும் திருவள்ளுவ நாயனாரும் சிவாவின் தமிழ்ப்பற்றில் தனி இடம் வகித்தனர்.
அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். பொதுவாக தலைவர்கள் தான் கூட்டம் போட்டு பேசுவார்கள் ஆனால் சிவாவோ கூட்டம் எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கே சென்று பேசுவார். தொழிலாளர்களும் இளைஞர்களும் மே தனக்கு உறுதுணை என்று கருதினார் சிவா. அதனால் அவர் கலந்து கொள்ளாத போராட்டங்களோ மாநாடுகளோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலும் சிவாவின் குரல் ஒலித்தது. தூத்துக்குடி கோரல் மில், மதுரை ஹார்வி மில் மற்றும் சென்னை டிராம்வே தொழிலாளர் போராட்டங்களில் பங்கு கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாய் நின்றார். பல பகுதிகளில் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். அதனால் அடிக்கடி சிறையும் சென்றார்.
மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்.
நவம்பர் 17, 1921இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.திருச்சியில் சிறையில் இருக்கும்போது தொழுநோயாளிகளுடன் சேர்த்து சிறைவைக்கப்பட்டதால். இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் சனவரி 12, 1922இல் விடுதலைச் செய்யப்பட்டார். இவர் சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதி ஆவார்.
ஆந்திர மாநிலம் அலிபுரம் சிறையில் இருக்கும் போது தியாகி எம்டன், கந்தசாமி குப்தா மற்றும் டி.என்.தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்ப்பட்ட நட்பால் சிவா தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டிக்கு வந்தார். தனது நண்பர் சின்ன முத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடம் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு பாரதபுரம் என்று பெயர் சுட்டினர். அதில் பாரத ஆசிரமமும் ஏற்படுத்தினார். சிவாவும் ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியார் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும் காசும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தினர்.
பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், மகத்மர காந்தியை அழைத்து அடிக்கல் நாட்ட எண்ணினார். ஆனால் கொல்கத்தாவைச் சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி சித்தரஞ்சன்தாஸ் ஐ அழைத்து வந்து 23.1.1923 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். சாதி மத இன பேதுமின்றி அனைவரும் வணக்குவதற்குரிய ஒரு கோயிலை கட்ட கனவுகண்டார். புதுச்சேரியில் உள்ள அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாரதமாதா சிலையை வடிவமைத்து அந்த சிலையை ஆலயத்தின் மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்றும் எண்ணினார். மாதாவின் பார்வையாலேயே மேற்கு நாடுகள் பூட்டிய அடிமை விலங்கு தூள் தூளாகா நொறுங்கி போகும் என்று எண்ணினார் சிவா.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து பாரதமாதா கோயில் கட்ட நன்கொடை திரட்ட முடிவு செய்திருத்தார். அவருக்கு இருந்த தொழுநோய் இருப்பதை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு பேருந்து மற்றும் தொடர்வண்டியில் செல்ல தடை விதித்தது. இருப்பினும் கால்நடையாகவும் கட்டைவண்டியிலும் சென்று சொற்பொழிவு ஆற்றி நிதி திரட்டினார்.
22.7.1925-ல் தன் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமம் திரும்பிய அவர் தனது நண்பர்களுடன் உற்சாகமாக பேசிவிட்டு உறங்கச் சென்றார். ஆனால் அடுத்த நாள் 23.7.1925 தனது 41-வது வயதில் இவ்வுலக வாழ்வில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்.
பாரதமாதாவுக்கு ஆலயம் கட்டவேண்டும் என்ற கனவு அவரது இரத்ததிலும், சதையிலும், உயிரிலும் கலந்திருந்தது. சிவாவின் ஆசை இன்று வரை கனவாகவே உள்ளது. பாரதியாரால் வடிவமைக்கப்பட்ட பாரதமாதா சிலை இப்போதும் பாப்பாரபட்டியில் தான் உள்ளது.
வருத்தப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இவரின் புகைப்படத்தை கூட பலருக்கு சரியாக தெரியாது. இவரின் புகைப்படத்திற்கு பதிலாக பல இடங்களில் மற்றொறு தியாகி வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்துகிறோம்.கூகுளில், சுப்பிரமணிய சிவா என்று தேடினால் வருகிற புகைப்படமே தியாகி வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களின் புகைபடம் தான்.
பாரதமாதாவிற்கு கோவில் கட்ட நினைத்த ஓர் தியாகியின் உருவம் கூட நமக்கு தெரியவில்லை என்பது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு அவமானம்.
👌👌👌👌👌
ReplyDelete